ரப்பர் தோட்டத்தில் சுற்றி திரிந்த யானைக்கூட்டத்தால் பரபரப்பு

காளிகேசம் ரப்பர் தோட்டத்தில் காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பால்வெட்ட சென்ற தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2018-08-03 23:19 GMT
அழகியபாண்டியபுரம்,



குமரி மாவட்டம் கீரிப்பாறை, காளிகேசம் போன்ற பகுதிகளில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு பால்வெட்டுதல், மரங்களை பராமரித்தல் போன்ற வேலைகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தினமும் அதிகாலையில் வேலைக்கு செல்வார்கள். இந்த பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களை அவ்வப்போது காட்டு விலங்குகள் தாக்குவது உண்டு. இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் காளிகேசம் 42-வது கூப்பு பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் வெட்ட சென்றனர்.

அப்போது, அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் 7 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்தன. அவை பிளிறியபடி ஒன்றுக்கொன்று துரத்தி விளையாடி கொண்டு இருந்தன. இதைக்கண்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து பால்வெட்ட செல்லாமல் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறை மற்றும் அரசு ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தொழிலாளர்கள் யாரும் யானைக்கூட்டம் நிற்கும் இடத்துக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, ரப்பர் தோட்டங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாட தொடங்கி உள்ளன. இதனால், தொழிலாளர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

எனவே, வனத்துறையினர், தொழிலாளர்கள் பால்வெட்டும் பகுதியில் யானை மற்றும் கொடிய காட்டு விலங்குகள் வராதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்