பெங்களூருவில் விளம்பர பலகைகளை அகற்ற கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் முதல்–மந்திரி குமாரசாமி வேண்டுகோள்

பெங்களூருவில் விளம்பர பலகைகளை அகற்ற கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்–மந்திரி குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-05 22:00 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் விளம்பர பலகைகளை அகற்ற கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்–மந்திரி குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி பகுதியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூருவில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி கடந்த 4, 5 நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுதொடர்பாக முதல்–மந்திரி குமாரசாமி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

பெங்களூருவில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் நகரின் அழகு தோற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அது மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது. அதனால் அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை மதித்து, விளம்பர பலகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த விளம்பர பலகைகளை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. விளம்பர பலகைகள் இல்லாத நகரமாக பெங்களூருவை மாற்றவும், பெங்களூருவின் பழைய அழகான தோற்றத்தை ஏற்படுத்தவும் கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

பெங்களூருவில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி கமி‌ஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். விளம்பர பலகைகளை அகற்றும் பணிக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்