காரமடை அருகே கட்டாஞ்சி மலைப்பாதையில் தாறுமாறாக ஓடிய வேன் தடுப்புச்சுவரில் மோதியது, 12 பேர் காயம்

காரமடை அருகே உள்ள கட்டாஞ்சி மலைப்பாதையில் தாறுமாறாக ஓடிய வேன் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் குழந்தை உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-08-05 21:30 GMT

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை அருகே கட்டாஞ்சி மலை உள்ளது. பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், தாயனூர், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் காரமடை சென்று அதன் பின்னர் செல்ல வேண்டும்.

ஆனால் இந்த கட்டாஞ்சி மலைப்பாதை வழியாக சென்றால் தூரம் மிகக்குறைவு ஆகும். எனவே இந்த மலைப்பாதையில் சாலை வசதி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி அங்கு 5 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கோவை அருகே உள்ள துடியலூர் அண்ணா காலனியை சேர்ந்த 25 பேர் ஒரு வேனில் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று பகல் 12 மணியளவில் அவர்கள் துடியலூரில் இருந்து வேனில் புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற வேன் கட்டாஞ்சி மலைப்பாதையில் ஏறியது. பின்னர் அந்த வேன் மலைப்பாதையில் கீழே இறங்கிக்கொண்டு இருந்தது. அப்போது அந்த வேன் 4–வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என்று கத்தினார்கள்.

உடனே டிரைவர் அந்த வேனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் அந்த வேன் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதனால் வேனுக்குள் இருந்த அவந்திகா என்ற 1½ வயது குழந்தை, சசிகலா (24), மெகந்தி (22) உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களை உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அத்துடன் சிலர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரமடை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மலைப்பாதையில் வேன் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நல்ல வேளையாக தடுப்புச் சுவரில் மோதிய வேன் அங்கேயே நின்றது. நிற்கவில்லை என்றால் 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டு இருந்திருக்கும். இந்த விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்