பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு முறையை அமல் படுத்தவேண்டும், எஸ்.சி., எஸ்.டி. தபால் ஊழியர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தபால் ஊழியர்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டு முறையை அமல் படுத்தவேண்டும் என அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. தபால் ஊழியர் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-08-05 21:45 GMT

விருதுநகர்,

அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. தபால் ஊழியர்களின் நலச்சங்க விருதுநகர் கோட்ட மாநாடு விருதுநகர் டவுன் தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. காரைக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மாரியப்பன், அம்பேத்கர் படத்தை திறந்து வைத்தார். விருதுநகர் தலைமை அஞ்சல் அதிகாரி விக்டர் தனிஸ்லாஸ் தலைமை தாங்கினார். பா. ஜனதா கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தேசிய செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், சங்க மாநில செயலாளர் பழனிராஜன் உள்பட பலர் பேசினர். கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜி.டி.எஸ். அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும். விருதுநகர் கோட்டத்திலுள்ள ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பணி மாறுதல் பிரச்சினை மீது உடனடி நடவடிக்கை எடுப்பதோடு ஊழியர்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஊழியர்களுக்கான பதவிஉயர்வில் இடஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு வந்திருந்தோரை முன்னதாக சங்க தென்மண்டல செயலாளர் மகாலிங்கம் வரவேற்று பேசி இறுதியில் நன்றியும் கூறினார்.

மேலும் செய்திகள்