தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-08-05 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோணமாக்கனப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாலகொண்டப்பா (வயது 65). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மேய்ச்சலுக்காக சென்ற அவருடைய மாடுகள் வீட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக பாலகொண்டப்பா மாடுகளை தேடி அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த ஒரு காட்டு யானை பாலகொண்டப்பாவை துரத்தியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து வேகமாக ஓடினார். இருப்பினும், யானை விடாமல் துரத்தி சென்று அவரை துதிக்கையால் தாக்கி, தூக்கி வீசியது.

இதில் பலத்த காயம் அடைந்த பாலகொண்டப்பா மயக்கம் அடைந்தார். அப்போது யானை அவரை கால்களால் மிதித்து கொன்றது. இதைத் தொடர்ந்து யானை அங்கிருந்து சென்று விட்டது. இதற்கிடையே மாடுகளை தேடி சென்ற பாலகொண்டப்பா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அவரை தேடி வனப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் பாலகொண்டப்பா யானை தாக்கி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கும், தேன்கனிக்கோட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்