மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை கூட்டம்

அரசு பொது தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

Update: 2018-08-05 22:00 GMT
செஞ்சி, 



விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் செஞ்சி பகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்து வரும் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்தவேண்டும். மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு தவறாமல் வருகிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும். பாட ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் செயலை திறம்பட மேற்கொள்வதுடன், விரைவாக கற்கும் மாணவர்கள், மெல்ல கற்கும் மாணவர்களை தனித்தனியாக கண்டறிந்து அவர்களுக்கு ஏற்றார்போல் பாடம் நடத்த வேண்டும்.

மாணவ-மாணவிகள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளவும், மாணவர்கள் மன்றங்கள் சார்ந்த இணை செயல்பாடுகளில் ஈடுபடவும் ஊக்கப்படுத்த வேண்டும். உடற்கல்வி, யோகா போன்ற உடல் நலக்கல்வியில் மாணவர்களை ஈடுபட வைக்க வேண்டும். மேலும் சாதி, சமய வேறுபாடின்றி மாணவர்கள் கல்வி கற்கும் சூழலை உருவாக்கவும், குடும்ப சூழல் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களை நெறிப்படுத்தவும் வேண்டும். கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, அவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக பாடப்பகுதி முழுவதையும் கற்பதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற பாடுபட்ட செஞ்சி பகுதிக்குட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 316 பேருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சந்திரகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன், ராஜா தேசிங்கு கல்லூரி தாளாளர் செஞ்சிபாபு மற்றும் செஞ்சி பகுதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்