கேலி, கிண்டல் செய்யும் மாணவர்களின் ‘மீம்ஸ்’களால் மனமுடைந்த ஆசிரியர் கல்வி மந்திரிக்கு கடிதம் எழுதினார்

கேலி, கிண்டல் செய்யும் மாணவர்களின் ‘மீம்ஸ்’களால் மனமுடைந்த ஆசிரியர் கல்வி மந்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

Update: 2018-08-05 22:30 GMT
மும்பை, 

கேலி, கிண்டல் செய்யும் மாணவர்களின் ‘மீம்ஸ்’களால் மனமுடைந்த ஆசிரியர் கல்வி மந்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

‘மீம்ஸ்’களால் மனமுடைந்த ஆசிரியர்

மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் உதய் நாராயே. இவரிடம் படித்த மாணவர்கள் இவரின் பண்புகளை வைத்து பல்வேறு ‘மீம்ஸ்’களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இதுகுறித்து மாணவர்களே சிலர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஆசிரியர் உதய் நாராயே, தன்னை கேலி, கிண்டல் செய்து மாணவர்கள் உருவாக்கிய அந்த ‘மீம்ஸ்’களை பார்த்து மனமுடைந்தார். பொதுவாக மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களை கேலி செய்வர். இது தெரிந்தும் ஆசிரியர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் சமூக வலைத்தளத்தில் மாணவர்கள் ஆசிரியர்களை கேலி செய்யும் போது அதை ஆசிரியர் தவிர அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பல்வேறு தரப்பினர் பார்ப்பார்கள். எனவே தான் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்கி மீம்ஸ்போடுவது ஆசிரியர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

கல்வி மந்திரிக்கு கடிதம்

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஆசிரியர் உதய் நாராயே கல்வி துறை மந்திரி வினோத் தாவ்டேக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர், சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

முன்னாள் மாணவர்கள் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆசிரியர்களை அவர்களின் குணநலன்கள், சிகை அலங்காரங்கள் போன்றவற்றை வைத்து கேலி செய்கின்றனர். சில சமயங்களில் ஆபாசமான பதிவுகளையும் போடுகின்றனர். தற்போது மாணவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் வல்லுனர்களாக உள்ளனர். ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் உள்ளனர். நான் மாணவர்களுக்கு எதிராக புகார் அளித்து அவர்களை கஷ்டப்படுத்தவோ அல்லது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவோ விரும்பவில்லை. எனவே தான் இந்த விவகாரத்தில் கல்வி துறை மந்திரிக்கு கடிதம் எழுதினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்