டிரைவர் காலிபணியிடத்துக்கு முறையாக நேர்காணல் நடத்தக்கோரி முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு

டிரைவர் காலிபணியிடத்துக்கு முறையாக நேர்காணல் நடத்தக்கோரி பால்வளத்துறை துணை பதிவாளரை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு.

Update: 2018-08-06 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக முதல் தளத்தில் பால்வளத்துறை (ஆவின்) துணை பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தமிழ்நாடு அமைச்சு பணியில் காலியாக உள்ள ஒரு டிரைவர் பணியிடத்துக்கு தகுதியான நபரை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற இருந்தது. இதற்கான விண்ணப்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், டிரைவர் பணியிடத்துக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வரவில்லை என தெரிகிறது. மேலும் அந்த பணியிடத்துக்கு வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெரம்பலூர் அ.தி.மு.க.வினர், விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து துணை பதிவாளர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் டிரைவர் காலிபணியிடத்துக்கான நேர்காணலை முறையாக நடத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் இருந்த துணை பதிவாளர் சபா ரத்தினத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், அரசு வக்கீல் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, துணை பதிவாளர் சபாரத்தினம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து, நேர்காணலை முறையாக நடத்தக்கோரி ஒரு மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்