மலேசியா விமானம் திடீர் ரத்து பயணிகள் கடும் அவதி

மலேசியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2018-08-06 22:45 GMT
செம்பட்டு,

திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இரவு 11.45 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்து மீண்டும் 12.10 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும். ஆனால் நேற்று முன்தினம் இரவு இந்த விமானம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டபோது, அங்கு திடீரென 30 பயணிகள் பயண டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த விமானம் திருச்சிக்கு வராமல் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் திருச்சி விமானநிலையத்தில் மலேசியா விமானத்துக்கு நேற்று அதிகாலை 2 மணி வரை காத்திருந்தும் விமானம் வராததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானநிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து வரவேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு, திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையே காரணம் எனவும் கூறப்படுகிறது.

மலேசியாவில் இருந்து அந்த விமானத்தில் திருச்சி வந்து இருந்தால் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி இருக்க கூடும். இதன் காரணமாகவே 30 பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட விமானம் நேற்று காலை 6.45 மணி அளவில் திருச்சி வந்தது. பின்னர் அந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் கோலாலம்பூருக்கு சென்றனர். ஒரு சில பயணிகள் மட்டும் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்று விட்டனர். 

மேலும் செய்திகள்