மளிகை கடையில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருச்செந்தூரில் மளிகை கடையில் நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-08-06 21:59 GMT
திருச்செந்தூர், 




திருச்செந்தூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் ராதாகிருஷ்ணனின் மகன் சீதாராமன் இருந்துள்ளார். அன்று மதியம் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வழக்கம் போல் நேற்று காலை 8 மணிக்கு ராதாகிருஷ்ணன் கடையை திறந்தார்.

அப்போது கடையில் இருந்த இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது கடையின் பின்பக்கம் உள்ள சுவற்றை மர்ம நபர்கள் உடைத்து, பின்னர் அதன் வழியே கடைக்கு வரமுயன்றனர். ஆனால் அவ்வாறு வரமுடியாததால், அதன் அருகே இருந்த ஜன்னலை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் இரும்பு பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 1 கிராம் தங்க மோதிரம் 4 ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்தது.

பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் ராமர், திருமுருகன் ஆகியோர் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் முக்கிய வியாபார பகுதியான வடக்கு ரதவீதியில் நடந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகள் மட்டுமல்லாது பொது மக்கள் இடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், திருச்செந்தூர் பகுதியில் தொடர்ந்து வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே திருச்செந்தூர் பகுதியில் அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்