கருணாநிதி மரணம்: தி.மு.க. பிரமுகர்கள் 5 பேர் அதிர்ச்சியில் சாவு

கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தி.மு.க. பிரமுகர்கள் 5 பேர் அதிர்ச்சியில் இறந்தனர்.

Update: 2018-08-07 23:00 GMT
ஓசூர்,

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதை அறிந்த தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் சென்னை விரைந்து உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டையம்புதூர் முனியப்பன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சின்னு என்ற மாரிமுத்து (68). விசைத்தறி தொழிலாளியான இவர் தி.மு.க. தொண்டர் ஆவார். இந்த நிலையில் நேற்று மாலை கருணாநிதி மரணமடைந்த செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்தார். அவருக்கு சம்பூரணம் என்ற மனைவியும், கணேசன், முருகன், ஆறுமுகம் என 3 மகன்களும், பொற்கொடி என்ற மகளும் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்தவர் தீர்த்தகிரி செட்டியார் (70). தி.மு.க. பிரமுகரான இவர், கருணாநிதி மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். இந்த நிலையில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து தீர்த்தகிரி செட்டியார் சோகத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து, கருணாநிதி இறந்த தகவலை அறிந்ததும் தீர்த்தகிரி செட்டியாருக்கு நேற்று திடீரென அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். அவரது உடலுக்கு கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

மயிலம் அருகே சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). முன்னாள் தி.மு.க. அவைத்தலைவர். இவர் நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்த டி.வி. செய்தியை மதியம் 3.30 மணி அளவில் பார்த்து தனது குடும்பத்தினரிடம் வருத்தப்பட்டு கூறிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், கிருஷ்ணன் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு ஊராட்சி நெல்லூர் கிராமம் 10-வது வார்டை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 40 வருடங்களாக தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை பார்த்து கொண்டிருந்தபோது ஜெயராஜ், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். சற்றுநேரத்தில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியை அடுத்துள்ள கலைஞர் காலனியை சேர்ந்தவர் சுப்பையா (51). பட்டாசு ஆலை தொழிலாளி. தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி இறந்ததை அறிந்து நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. மாலை 6.30 மணி அளவில் உட்கார்ந்த இடத்திலேயே மயங்கி சரிந்தார். அவரது உயிர் சில நிமிடங்களில் பிரிந்து விட்டது. சுப்பையாவுக்கு ரூபி என்ற மனைவியும் சூரியா, ராஜா என்ற 2 மகன்களும் பிரியா என்ற மகளும் உள்ளனர். 

மேலும் செய்திகள்