பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-08-07 23:00 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொணவக்கரை, பேட்லாடா, தப்பக்கம்பை, ஆனந்தகிரி காலனியில் 600–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கொணவக்கரை–பேட்லாடா செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் கோத்தகிரியில் இருந்து அரவேனு செல்லும் சாலை பழுதடைந்ததால் மேட்டுப்பாளையம் செல்வதற்கு இந்த சாலை மாற்றுப்பாதையாக உள்ளதுடன், கோத்தகிரி–கொட்டக்கம்பை செல்லும் சாலைக்கு மாற்றுப்பாதையாகவும் உள்ளது.

இதேபோல் பேட்லாடா, ஆனந்தகிரி காலனி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகள் கோத்தகிரிக்கு வந்து செல்ல இந்த சாலையையே பயன்படுத்தி வருகிறார்கள்.

கொணவக்கரை–பேட்லாடா சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் இப்பகுதியில் அரசு பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட வருவது இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் ஊர் தலைவர் பெள்ளன், ஊர் பிரமுகர் கிருஷ்ணன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை 11 மணியளவில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்குள்ள அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று உள்ளதாகவும், மாலை தான் வருவார் என்றும் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் சாலையை சீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்கக் கோரி பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர்கள் நசீர், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் பழுதடைந்த சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதில், சமாதானம் அடைந்த கிராம மக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்