ஈரோட்டில் பஸ்சில் சென்ற செங்கல் சூளை அதிபரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு, தொழிலாளி கைது

ஈரோட்டில் பஸ்சில் சென்ற செங்கல் சூளை அதிபரிடம் ரூ.5 லட்சத்தை பறித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-07 22:34 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மாருதிநகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). இவர் அம்மாபேட்டையில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். தொழிலை மேம்படுத்துவதற்காக அவர், கரூரில் உள்ள தனது சம்பந்தி பெரியசாமியிடம் கடன் கேட்டு இருந்தார். அந்த பணத்தை வாங்குவதற்காக நேற்று முன்தினம் மாதேஸ்வரன் கரூருக்கு சென்றார். அங்கு ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு மாதேஸ்வரன் அம்மாபேட்டைக்கு திரும்பினார்.

அவர் கரூரில் இருந்து ஈரோட்டிற்கு தனியார் பஸ்சில் வந்துகொண்டு இருந்தார். அந்த பஸ் மாலை 5 மணிஅளவில் ஈரோடு காளைமாட்டுசிலை பகுதிக்கு வந்தது. அங்கு பயணிகளை இறக்குவதற்காக பஸ் நின்றுகொண்டு இருந்தது.

பஸ்சில் மாதேஸ்வரனுக்கு அருகில் உட்கார்ந்து இருந்த 3 பேர், அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அப்போது மாதேஸ்வரனிடம் கீழே பணம் கிடப்பதாக ஒருவர் கூறினார். இதை நம்பி அவரும் கீழே குனிந்து பார்த்தார். அப்போது அவர்கள் 3 பேரும் மாதேஸ்வரனிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பறித்துவிட்டு, வேகமாக பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார்கள். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரன் ‘‘திருடன்... திருடன்...’’ என்று கூச்சலிட்டார்.

பஸ்சில் இருந்த சக பயணிகள் அவர்களை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் பயணிகளிடம் பிடிபட்டார். மற்ற 2 பேர் பணத்துடன் தப்பி சென்றுவிட்டனர். அதன்பின்னர் பிடிபட்ட நபரை ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தொழிலாளி குமார் (38) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், குமாருடன் வந்த 2 பேர் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோட்டில் பஸ்சில் சென்றவரிடம் 3 பேர் நூதன முறையில் ரூ.5 லட்சத்தை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்