கருணாநிதி மரணம்: சேலத்தில் கடைகள் அடைப்பு-பஸ்கள் ஓடவில்லை

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதியடைந்தனர். இதையொட்டி மாநகர், மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2018-08-07 21:45 GMT
சேலம், 



தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து சேலத்தில் கடைவீதி, செவ்வாய்பேட்டை, புதிய பஸ்நிலையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் என மாநகரில் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஓட்டல்கள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சேலத்தில் இருந்து பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல கூடிய அரசு பஸ்களும் மற்றும் தனியார் சொகுசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. குறிப்பாக சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய 50-க்கும் மேற்பட்ட சொகுசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மேலும் வெளியூர்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்களும் ஓடவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். பஸ்கள் இயக்கப்படாததால் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
கருணாநிதி மறைவையொட்டி சேலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் சேலம் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஓமலூரில் நேற்று மாலை திடீரென்று கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் ஒரு சில பஸ்களை தவிர பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதே போல தலைவாசல், மேட்டூர், எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, இளம்பிள்ளை, மேச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக டவுன் பஸ்கள் ஓடாததால், கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலையத்திலேயே தவித்தனர். ஒரு சிலர் அதிக வாடகை கொடுத்து தனியார் வாகனங்களில் சென்றனர்.
ஆங்காங்கே தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏற்காட்டிலும் கடைகள் அடைக்கப்பட்டதுடன், வாகனங்களின் இயக்கம் குறைவாக இருந்தது. மேலும் சுற்றுலா பயணிகள் பலர் தங்களது அறைகளில் முடங்கியதால், அவர்களின் நடமாட்டம் குறைந்திருந்தது. 

மேலும் செய்திகள்