விக்கிரமசிங்கபுரம் அருகே பரபரப்பு ஆட்டை கடித்து சென்ற சிறுத்தைப்புலி

விக்கிரமசிங்கபுரம் அருகே ஆட்டை கடித்து சென்ற சிறுத்தைப்புலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-08-08 21:00 GMT
விக்கிரமசிங்கபுரம், 

விக்கிரமசிங்கபுரம் அருகே ஆட்டை கடித்து சென்ற சிறுத்தைப்புலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயி 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 56). விவசாயி. இவர் ஏராளமான ஆடுகளும் வளர்த்து வருகிறார். தினமும் காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு, மாலையில் தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைப்பது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் மாலையும் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்று கொட்டகையில் அடைத்தார். பின்னர் இரவு முருகன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

ஆட்டை கடித்தது 

அப்போது திடீரென நேற்று அதிகாலை 2 மணிக்கு ஆடுகள் கத்தும் கேட்டது. உடனே திடுக்கிட்டு விழித்த முருகன் பதறிப்போய் வெளியே வந்தார். அப்போது அங்கு ஒரு சிறுத்தைப்புலி, கொட்டகையில் ஒரு ஆட்டை பிடித்து கடித்துக்கொண்டிருந்தது. இதனை பார்த்த முருகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். உடனே சிறுத்தைப்புலி அந்த ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது. இதில் காயமடைந்த அந்த ஆட்டிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை 

இந்த பகுதியில் சிறுத்தைப்புலி ஆடுகளை கடிக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் உள்ள ஒரு ஆட்டை சிறுத்தைப்புலி கடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. எனவே இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிறுத்தைப்புலி ஒன்று ஆட்டை கடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்