நீலகிரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-08-08 21:45 GMT
ஊட்டி, 


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள், கமர்சியல் சாலை, லோயர் பஜார், மெயின் பஜார், சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், தேநீர் கடைகள், ஓட்டல்கள், பெட்டிக்கடைகள், மருந்து கடைகள், பழக்கடைகள் போன்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தன. தாவரவியல் பூங்கா அருகே உள்ள திபெத்தியன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் பூட்டு போட்டு மூடப்பட்டு இருந்தது.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள 6 போக்குவரத்து பணிமனைகளில் 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் ஊட்டி மத்திய பஸ் நிலையம் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஊட்டி- தலைகுந்தா,ஊட்டி- கேத்தி, ஊட்டி-கோழிப்பண்ணை இடையே வழக்கமாக இயக்கப்படும் தனியார் மினி பஸ்கள் நேற்று ஓடவில்லை. இதனால் கிராம பகுதிகளில் இருந்து பல்வேறு பணிகளுக்காக ஊட்டி வருபவர்களை அழைத்து வரும் ஜீப், வேன்கள் இயங்கவில்லை. இதேபோல் சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால் அனைத்து பஸ்களும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூர் நகர சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மலைக்காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கிராமப்பகுதிகளில் இருந்து தினமும் அரசு பஸ்களில் பொதுமக்கள் வருவது வழக்கம். அரசு பஸ்கள் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. 

மேலும் செய்திகள்