கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை சென்ற நடிகர் விஷால்

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நடிகர் விஷால் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Update: 2018-08-08 22:45 GMT
செம்பட்டு,

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவர் விஷால் நடிக்கும் சண்டைக்கோழி-2 படத்தின் படிப்பிடிப்பு காரைக்குடியில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நடிகர் விஷால், இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் அங்கேயே முகாமிட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவு செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் படப்பிடிப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் அந்த குழுவினர் ரத்து செய்தனர்.

நடிகர் சங்க தலைவர் என்ற அடிப்படையில் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விஷால், லிங்குசாமி ஆகியோர் காரைக்குடியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் திருச்சிக்கு வந்தனர். திருச்சியில் இருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘கருணாநிதி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரது இழப்பினை யாராலும் ஈடு செய்ய முடியாது. இனி அப்படிப்பட்ட ஒரு தலைவரை பார்க்க முடியாது. கருணாநிதி மிகப்பெரிய அரசியல் தலைவர். அவர் ஒரு அரசியல் வாதி என்பதை விட 75 வருடங்கள் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்’ என்றார். 

மேலும் செய்திகள்