பஸ்கள் ஓடாததால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நேற்று வேலூரில் பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள், மருத்துவ சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2018-08-08 21:45 GMT
வேலூர், 



தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். அவர் உயிரிழந்த தகவல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்கள் உடனடியாக அருகில் உள்ள பணிமனைகளுக்குப் புறப்பட்டு சென்றன.

அதனால் பஸ் நிலையங்களில் நின்று கொண்டிருந்த பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறிது நேரத்துக்கு பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஓரிரு பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, போலீசார் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் பணியிலும், தீவிர ரோந்துப்பணியிலும் ஈடுபட்டனர்.

வேலூர், காட்பாடியில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. போலீசார் பாதுகாப்புடன் ஓரிரு அரசு பஸ்கள் முக்கிய இடங்களுக்கு இயக்கப்படும் என நினைத்து பஸ் நிலையங்களுக்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். அதேபோல் கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை. வேலூர் மாநகரில் 20 சதவீத ஆட்டோக்கள் மட்டுமே இயங்கின.
வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேலூருக்கு வருகின்றனர். அதேபோல் நேற்றும் ரெயில்கள் மூலம் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தனர். பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் ஆட்டோவில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்றனர்.

பஸ்கள் ஓடாததால் ஆட்டோ ஓட்டுனர்களில் சிலர் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு வருவதற்கு ரூ.30 வசூலிக்கப்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் ஆரணி சாலையில் உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்று மதியம் 12 மணியளவில் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தனர்.
பஸ்கள் ஓடாததால் தம்பதியர் அங்கிருந்து கண் மருத்துவமனைக்கு ஆட்டோவில் செல்ல முடிவு செய்தனர். ஆட்டோ ஓட்டுனர், கண் மருத்துவமனைக்குச் செல்ல தம்பதியரிடம் 250 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார். ஆட்டோ டிரைவர் கூடுதல் கட்டணம் கேட்டதால், தம்பதியினர் ஆட்டோ பயணத்தை தவிர்த்து விட்டு நடந்தே கண் மருத்துவமனைக்கு வந்தனர்.

அதேபோல் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீபுரத்துக்குச் செல்ல 400 ரூபாயும், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்துக்கு 30 ரூபாயும் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். ஆட்டோக்கள் தவிர வேறு வாகனங்கள் ஓடாததால் பயணிகள் கூடுதலாக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணம் செய்தனர். பஸ்கள் ஓடாததால் வேலூரில் இருந்து வெளியூருக்குச் செல்ல காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், ஆசைதம்பி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்