கோவில்பட்டியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ரூ.11 லட்சம் பொருட்கள் சாம்பலாகின

கோவில்பட்டியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Update: 2018-08-09 21:30 GMT

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை

கோவில்பட்டி செல்லப்பாண்டியன் தெருவை சேர்ந்த காசிராஜன் மகன் மகேசுவரன் (வயது 44). இவர் கோவில்பட்டி வேலாயுதபுரம்– சாத்தூர் சாலையில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நள்ளிரவு 1.30 மணி அளவில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதனை அங்குள்ள வணிக வளாகத்தின் காவலாளி மதி (50) என்பவர் பார்த்து, இதுகுறித்து மகேசுவரனுக்கும், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

ரூ.11 லட்சம் சேதம்

உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த பயங்கர தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்