புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் வைத்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை

Update: 2018-08-09 21:30 GMT

நெல்லை, 

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் வைத்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தாமிரபரணி புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெறும். அதன்படி வருகிற அக்டோபர் 11–ந் தேதி தொடங்கி, 22–ந் தேதி வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது. 149 தீர்த்த தலங்களில் இந்த விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவுக்கான முயற்சிகளை அகில பாரத துறவியர் சங்கம் மற்றும் தாமிரபரணி புஷ்கர கமிட்டியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அகஸ்தியர், தாமிரபரணி தேவி சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு பாளையங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பார்த்ததீர்த்த சுவாமி தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ரத யாத்திரை ஊர்வலத்தில் பல ஊர்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் நெல்லைக்கு வந்தது.

சிலைக்கு சிறப்பு பூஜை

நெல்லை மாநகரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தாமிரபரணி தேவி, அகஸ்தியர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று பாளையங்கோட்டையில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலுக்கு இந்த சிலைகள் எடுத்து செல்லப்பட்டது. அங்கு இந்த சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்