படப்பை அரசு பள்ளியில் சுற்றி திரியும் மாடுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

படப்பை அரசு பள்ளியில் சுற்றி திரியும் மாடுகளால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-09 22:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் படப்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கரசங்கால், சாலமங்கலம், ஆத்தனஞ்சேரி, வைப்பூர், ஒரத்தூர், வரதராஜபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்து வரும் மாணவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த பள்ளியில் மாணவர்களுக்கான சத்துணவு சமைத்து வழங்கப்படும் இடத்தில் மாடுகள் சுற்றி திரிகின்றன. அந்த மாடுகளால் மாணவர்கள் அச்சத்துடன் சத்துணவை வாங்கி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.

மாணவர்கள் சத்துணவு வாங்கி சாப்பிடும் இடங்களிலேயே மாடுகள் இயற்கை உபாதைகளை கழிக்கிறது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மாடுகள் பள்ளி வளாகத்திற்கு வருவதை தடுக்கவும் மாணவர்களுக்கு மாடுகளால் தொற்று நோய் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்