வழி கேட்பதுபோல் நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்

வழி கேட்பதுபோல் நடித்து பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-08-09 23:00 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை ரங்கா நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம்(வயது 55). இவர், பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை திருநீர்மலை மெயின்ரோடு சுப்புராயன் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், சுந்தரத்திடம் தாம்பரத்துக்கு எப்படி செல்லவேண்டும்? என வழி கேட்பதுபோல நடித்து, திடீரென அவரது சட்டைப்பையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.  ஆனால் சுந்தரம் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்றவர்களில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபரை மட்டும் மடக்கிப் பிடித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர், தப்பிச்சென்று விட்டார். பிடிபட்ட வாலிபரை சங்கர்நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், பல்லாவரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த இர்பான்(21) என்பதும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.

இதையடுத்து இர்பானை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளி நூர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்