கோவை : தனியார் பஸ் மோதி போலீஸ் ஏட்டு மகன் சாவு

கோவை அண்ணா சிலை அருகே தனியார் பஸ் மோதி போலீஸ் ஏட்டு மகன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-09 22:45 GMT
கோவை, 


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை ஆர்.எஸ்.புரம் லோக்மான்யா வீதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் கோவையை அடுத்த வடவள்ளி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மல்லிகார்ஜுனன் (வயது 19). இவர் நீலாம்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்.

அதன்படி அவர் நேற்று காலை 7.30 மணியளவில் அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சிக்னலை கடந்து அண்ணா சிலை சிக்னல் வந்தார். அப்போது சிவப்பு விளக்கு எரிந்ததால் மல்லிகார்ஜுனன் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்தார்.

அப்போது தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரம் செல்லும் 99-ம் தடம் எண்ணுள்ள தனியார் டவுன் பஸ் பின்னால் வந்தது. அந்த சிக்னலில் இடதுபுறம் திரும்பிச் செல்லும் வாகனங்கள் பச்சை நிற சிக்னலுக்காக காத்திருக்க வேண்டியது (பிரி லெப்ட்) இல்லை. இதனால் அந்த தனியார் பஸ் வேகமாக வந்து இடது புறம் திரும்பியது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த மாணவர் மல்லிகார்ஜுனன் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் மாணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவர் மல்லிகார்ஜுனன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோவை கிழக்குப் பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் தொண்டாமுத்தூரை சேர்ந்த கர்ணன் (45) என்பவரை கைது செய்தனர்.

விபத்து நடந்த அண்ணா சிலை சிக்னல் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. அவினாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எல்.ஐ.சி. சிக்னலை கடந்து அண்ணா சிலைக்கு வந்து காந்திபுரம் செல்ல வேண்டுமென்றால் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. அந்த இடம் இடதுபுறம் திரும்பலாம் (பிரிலெப்ட்).

இது தெரியாத சில இருசக்கர வாகன ஓட்டிகள் இடது புறம் செல்லும் பகுதியை அடைத்துக் கொண்டு நின்றால் பின்னால் வரும் தனியார் பஸ் டிரைவர்கள் முன்னால் வழியை மறித்துக் கொண்டு நிற்கும் வாகன ஓட்டிகளை விலகி செல்வதற்காக அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புகிறார்கள். மேலும் அதிக வேகத்துடன் அருகில் வந்து திடீர் பிரேக் பிடிக்கிறார்கள்.

இதில் மிரண்டு போகும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவசரம் அவசரமாக வாகனத்தை தள்ளிக் கொண்டும், வேகமாக ஸ்டார்ட் செய்தும் அந்த இடத்தை விட்டு நகருவது அடிக்கடி நடக்கிறது. இதுபோன்று தான் நேற்று நடந்த சம்பவத்திலும் கல்லூரி மாணவர் இறந்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில் அண்ணா சிலை சிக்னலில் வேகமாக வரும் தனியார் பஸ்களினால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த விபத்தை தடுக்க வேண்டுமென்றால் பெரிய வாகனங்கள் குறிப்பாக பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் பச்சை நிற சிக்னல் விழுந்தால்தான் இடது புறம் திரும்பும் வகையில் சிக்னலில் மாற்றம் செய்தால் தான் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க முடியும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்