பயிர் காப்பீட்டு திட்டத்தில் இடைத்தரகர்கள் புகுந்து மோசடியில் ஈடுபடுவதாக புகார்

தேவகோட்டை பகுதியில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சில இடைத்தரகர்கள் புகுந்து மோசடி வேலைகளை செய்து வருவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-08-09 22:00 GMT
தேவகோட்டை,



மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதுகாக்க பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த பயிர்காப்பீட்டு திட்டத்தின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் சில இடைத்தரகர்கள் புகுந்து சில விவசாயிகளிடம் குறைவான சொத்திற்கு கூடுதல் சொத்து இருப்பதுபோல் அதற்குரிய அடங்கல் பெற்று காப்பீடு செய்துள்ளனர். இதனால் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு தேவகோட்டை தாலுகாவில் 6 ஏக்கர் 22 சென்ட் நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு 12 ஏக்கருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது தற்சமயம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பணத்தை மோசடி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த கற்களத்தூர் குரூப்பில் அதிகாரிகள் சிறப்பு விசாரணை நடத்தினால் உண்மையாகவே விவசாயிகள் சொந்தமாக எத்தனை ஏக்கர் நிலம் வைத்துள்ளனர், அதற்கு எவ்வளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வரும்.

மேலும் அரசு 10(1) நகல் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அடங்கல் வழங்கி காப்பீடு செய்ய வேண்டும். நில உடமைதாரர்களுக்கே தெரியாமல் அவர்களது நிலங்கள் காப்பீடு செய்யப்பட்டு மோசடிகள் நடந்து வருகின்றன.

எனவே கலெக்டர் சிறப்பு விசாரணை நடத்தி இடைத் தரகர்கள் மூலம் நடைபெறும் இவ்வாறான மோசடிகளை தடுக்க வேண்டும். மேலும் இவ்வாறான முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையிலேயே பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகை சென்று சேர வாய்ப்பு ஏற்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்