தமிழகத்தில் மக்களுக்கான சினிமா இதுவரை வரவில்லை இயக்குனர் தங்கர்பச்சான் பேச்சு

தமிழகத்தில் மக்களுக்கான சினிமா இதுவரை வரவில்லை என்று தர்மபுரியில் நடந்த புத்தக திருவிழாவில் இயக்குனர் தங்கர்பச்சான் பேசினார்.

Update: 2018-08-09 22:45 GMT
தர்மபுரி,

தகடூர் புத்தக பேரவை சார்பில் தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று இரவு நடந்த சிறப்பு கருத்தரங்கிற்கு ஸ்ரீவிஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார். முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், கிரீன்பார்க் பள்ளி தாளாளர் முனிரத்தினம், தீபக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.எம்.ஏ. பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி வெங்கடேசன், பேராசிரியர் முனவர் ஜான் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பேராசிரியர் பெருமாள் முருகன் சரித்திர தேர்ச்சி கொள் என்ற தலைப்பில் பேசினார்.

கருத்தரங்கில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு பேசியதாவது:-

சினிமா தோன்றி 110 ஆண்டுகள் ஆகின்றன. சினிமா என்ற பெயரில் எதை, எதையோ பார்த்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் மக்களுக்கான சினிமா இதுவரை வரவில்லை. வடதமிழகத்தின் வாழ்வியல், அரசியல், மக்களின் கலை,கலாச்சாரம் தமிழ்சினிமாவில் இதுவரை பேசப்படவில்லை. வட மாவட்டங்களில் இந்த மண்ணின் சிறப்புகளையும், மக்களின் வாழ்வியலையும் வெளிப்படுத்தக்கூடிய படைப்பாளிகள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகாததே இதற்கு முக்கிய காரணம்.

தர்மபுரி மாவட்டம் அழகான நிலப்பரப்பை கொண்டது. இந்த மாவட்டத்தில் பழங்கால தொல்லியல் மரபுகள் ஏராளமாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தொல்லியல் மரபுகளை வெளிக்கொண்டுவருவதற்கான ஆராய்ச்சிகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். அதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம் கோரிக்கை வைக்கிறேன். தர்மபுரி என்ற பெயரை தகடூர் என்று மாற்ற வேண்டும்.

எதற்கெடுத்தாலும் திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் மட்டுமே மேற்கோள்காட்டிவிட்டு அதன் கருத்துக்களை வாழ்க்கையில் கொஞ்சம்கூட பின்பற்றாத போக்கு இங்கு உள்ளது. செல்போன்கள் வந்தபிறகு தமிழர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் போய்விட்டது. தமிழில் வாழ்க்கைக்கு தேவையான மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ள ஏராளமான எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களுடைய படைப்புகளை இளைஞர்கள் தேடிப்பிடித்து படித்தால் அவர்களுடைய சிந்தனைகள் தெளிவு பெறும். உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்கான தூண்டலை பெற முடியும்.

இவ்வாறு தங்கர் பச்சான் பேசினார். இந்த விழாவில் செந்தில் பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் கவிஞர் தகடூர் வனபிரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்