மொபட்டில் வந்த பெண்ணிடம் நூதன முறையில் நகை, பணம் அபேஸ்

பல்லடத்தில் பட்டப்பகலில் மொபட்டில் வந்த பெண்ணிடம் நூதன முறையில் நகை- பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற துணிகர சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-09 22:52 GMT
பல்லடம், 


இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் செரீப்காலனி 2-வது வீதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் மாட்டு தீவனங்களை தரகு அடிப்படையில் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி உமாதேவி(வயது 30). இவர் பல்லடத்தில் திருச்சி சாலையில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார்.

அந்த நகையை மீட்பதற்காக ரூ.48 ஆயிரம் மற்றும் 1 பவுன் சங்கிலி, ½ பவுன் கம்மல் ஆகியவற்றை ஒரு சிறிய பணப்பையில் வைத்து எடுத்துக்கொண்ட உமாதேவி, தனது மொபட்டில் நேற்று பல்லடத்துக்கு புறப்பட்டு சென்றார். வங்கிக்கு சென்று நகையை மீட்பது குறித்து அவர் கேட்ட போது, ரூ.49 ஆயிரம் செலுத்தவேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவரிடம் ரூ.48 ஆயிரம் மட்டுமே இருந்ததால், நாளை வந்து நகையை மீட்டுக்கொள்கிறேன் என்று அதிகாரிகளிடம் கூறிவிட்டு வங்கியில் இருந்து புறப்பட்டார். பல்லடம் என்.ஜி.ஆர். சாலையில் மொபட்டில் அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள், உமாதேவியை மறித்து, ‘உங்கள் பணம் சாலையில் கிடக்கிறது’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் அவர் மொபட்டை நிறுத்திவிட்டு, வந்த வழியே சற்று தூரம் நடந்து சென்ற போது, அங்கு 10 ரூபாய் நோட்டுகள் 2-ம், 50 ரூபாய் நோட்டுகள் 1-ம் என்று ரூ.70 கீழே கிடந்தது. அதை அவர் எடுக்க முயன்ற போது, அவரிடம் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் அவரிடம் ஏதோ கேட்டு, உமாதேவியின் கவனத்தை திசைதிருப்பி உள்ளனர்.

அந்த நேரத்தில் பணம் கிடப்பதாக கூறிச்சென்ற 2 வாலிபர்கள், மீண்டும் உமாதேவியின் மொபட்டின் அருகில் வந்து, மொபட்டின் பக்கவாட்டு கவரில், ரூ.48 ஆயிரம் மற்றும் 1½ பவுன் நகை இருந்த பணப்பையை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

உமாதேவி கீழே கிடந்த ரூ.70-ஐ எடுத்துக்கொண்டு தனது மொபட் அருகே வந்தார். பின்னர், அதை தனது பணப்பையில் வைக்க மொபட்டின் பக்கவாட்டு கவரில் கைவிட்டபோது, பணப்பையை காணவில்லை. அப்போது தான், நூதன முறையில் ஏமாற்றி நகை-பணத்தை மர்ம கும்பல் அபேஸ் செய்து சென்றது உமாதேவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி பல்லடம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, உமாதேவியின் மொபட்டில் இருந்து மர்ம ஆசாமிகள் பணப்பையை திருடிச்செல்லும் காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகளை வைத்து, பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
பல்லடத்தில் பட்டப்பகலில் மொபட்டில் வந்த பெண்ணிடம் நூதன முறையில் நகை-பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற துணிகர சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்