கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் கைது

திருப்பூரில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-10 23:00 GMT
நல்லூர்,

நெல்லையை சேர்ந்தவர் மாயாண்டிராஜா. இவர் திருப்பூர் காங்கேயம் சாலை ராக்கியாபாளையம் அருகே உள்ள வள்ளியம்மை நகர் 4-வது வீதியில் குடும்பத்துடன் தங்கி மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில், மாயாண்டிராஜாவின் மனைவி சீதாலட்சுமி (வயது 35) கடையில் வியாபாரத்தை கவனித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, குடிபோதையில் கடைக்கு வந்த ஒரு வாலிபர், சீதாலட்சுமியிடம் சிகரெட் கேட்டுள்ளார். இவர் சிகரெட்டை எடுத்து கொடுத்துவிட்டு, அதற்கு பணம் கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கட்டி சீதாலட்சுமியை மிரட்டியதுடன், அவரிடம் இருந்து 3 பாக்கெட் சிகரெட், ரூ.500 ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சீதாலட்சுமி, இதுபற்றி திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சீதாலட்சுமியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் தினேஷ் என்ற மாரியப்பன் (24)என்பது தெரியவந்தது.

அத்துடன், அவர் மீது திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து தினேஷ் என்ற மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்