ஊட்டி சாலையோரங்களில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைகள் கிழிந்து தொங்கும் அவலம்

ஊட்டி சாலையோரங்களில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைகள் கிழிந்து தொங்கும் அவல நிலை காணப்படுகிறது.

Update: 2018-08-10 21:59 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் ஏற்ற, இறக்கங்களாக காணப்படுகிறது. மலைப்பாதைகளில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

அதன்படி பர்லியார்- கூடலூர் சாலையில் 35 கிலோ மீட்டர் வேகம், ஊட்டி- எப்பநாடு, ஊட்டி-மஞ்சூர், ஊட்டி-கோத்தகிரி, பந்தலூர்-எருமாடு, கூடலூர்-பாட்டவயல் சாலைகளில் 35 கிலோ மீட்டர் வேகம், தலைகுந்தா-மசினகுடி சாலையில் 20 கிலோ மீட்டர் வேகம், ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் நகர பகுதிகளில் 20 கிலோ மீட்டர் வேகம், ஊரக சாலைகளில் 30 கிலோ மீட்டர் வேகம், மலைப்பகுதி மற்றும் சாலைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் 15 கிலோ மீட்டர் வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும்.

இதற்கிடையே ஊட்டி- கோத்தகிரி, ஊட்டி- குன்னூர், ஊட்டி-கூடலூர் உள்பட பல்வேறு சாலையோரங்களில் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைள்(பிளக்ஸ் பேனர்) வைக் கப்பட்டன. இதன் மூலம் மலைப்பாதைகளில் வாகனங்களை புதியதாக இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தகவல் பலகைகள் கிழிந்து தொங்கி, அவல நிலையில் காட்சி அளிக்கிறது. குறிப்பாக ஊட்டி-கோத்தகிரி ரோடு, ஊட்டி அருகே முத்தோரை எம்.பாலாடா பகுதி ஆகிய இடங்களில் தகவல் பலகைகள் முற்றிலும் கிழிந்துவிட்டன. இதனால் வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, எந்த நோக்கத்துக்காக வேக கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டதோ, அதன் நோக்கம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே காற்றில் கிழியாமல் இருக்கும் வகையில் தகரம் அல்லது இரும்பால் ஆன தகவல் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்