குப்பை கிடங்கில் காட்டாத்துறை ஊராட்சி கழிவுகளை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிப்பு

பத்மநாபபுரம் நகராட்சி குப்பை கிடங்கில், காட்டாத்துறை ஊராட்சி கழிவுகளை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-11 23:00 GMT
பத்மநாபபுரம்,

பத்மநாபபுரம் நகராட்சிக்கு உள்பட்ட குப்பை கிடங்கு, தக்கலை அருகே மருந்துகோட்டை பகுதியில் உள்ளது. இங்கு நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கம். நேற்று காட்டாத்துறை ஊராட்சியில் சேகரிப்பட்ட கழிவுகளை ஏற்றி கொண்டு 4 வாகனங்கள் குப்பை கிடங்குக்கு வந்தன. அந்த வாகனங்களுடன் ஊராட்சி அலுவலர் சுஜனும் உடன் வந்திருந்தார்.

2 வாகனங்கள் குப்பைகளை கொட்டிவிட்டு சென்றன. மீதமுள்ள 2 வாகனங்கள் குப்பைகளை கொட்டிய போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடினர்.

அவர்கள் குப்பை கிடங்கின் கேட்டை மூடி 2 வாகனங்களையும் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பத்மநாபபுரம் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காட்டத்துறை ஊராட்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தக்கலை போலீசார் அங்கு சென்றனர். போலீசார் குப்பை கிடங்கின் நுழைவு வாயிலை பூட்டிவிட்டு இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பேச்சுவார்த்தையின் போது, காட்டாத்துறை அலுவலர் சுஜன் கூறும் போது, நகராட்சி குப்பை கிடங்கில் கழிவுகளை கொட்டுவதற்கு கூடுதல் கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார்.

இதையடுத்து குப்பை கிடங்கிற்குள் பூட்டி வைக்கப்பட்ட 2 வாகனங்களையும் போலீசார் விடுவித்தனர். அதன்பின்பு, அந்த வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்