அரசுக்கு எதிரான போராட்டங்களில் மாவோயிஸ்டுகள் பங்கேற்பு? - போலீசார் ரகசிய விசாரணை

திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதியில் மீண்டும் களம் அமைக்க முயற்சி செய்யலாம் என்பதால், அரசுக்கு எதிரான போராட்டங்களில் மாவோயிஸ்டுகள் பங்கேற்கிறார்களா? என்று போலீசார் ரகசியமாக விசாரிக்கின்றனர்.

Update: 2018-08-11 22:45 GMT
திண்டுக்கல்,

கொடைக்கானலில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுத பயிற்சி மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்ததும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த நவீன்பிரசாத் என்பவர் கொல்லப்பட்டார். மேலும் 2 பெண்கள் உள்பட 7 பேர் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் ரஞ்சித் என்பவர் மட்டும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். மற்ற 6 பேரும் வெவ்வேறு சிறைகளில் உள்ளனர். இந்த வழக்கு திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வனப்பகுதியிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இதனால் திண்டுக்கல், தேனி மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் மீண்டும் களம் அமைக்க முயற்சிக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

இதையடுத்து இரு மாவட்ட வனப்பகுதிகளிலும் அவ்வப்போது அதிரடிப்படை போலீசார் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் மலைக்கிராமங்களுக்கு வந்து செல்லும் வெளிநபர்களை, கியூ பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். எனினும், இதுவரை வனப்பகுதிகளிலோ அல்லது மலைக்கிராமங்களிலோ மாவோயிஸ்டுகள் சிக்கவில்லை.

எனவே, நகர்ப்பகுதிகளில் தங்கியிருந்து ஆட்களை திரட்டும் முயற்சியில் ஈடுபடலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள், தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களில் பங்கேற்கும் நபர்கள், ஏற்பாட்டாளர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்