மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும், ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி

மழைநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

Update: 2018-08-12 23:00 GMT

பொள்ளாச்சி,

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில் பொள்ளாச்சியில் நேற்று பண்பாடு போற்றுவோம் என்ற பெயரில் கலாசார விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது. இளைய தலைமுறையினர் இடையே குற்றங்களை தடுக்கும் வகையில் அரசியல், சாதி வேறுபாடு இன்றி பண்பாடு போற்றுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கொங்கு மண்டலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

இன்றைய சூழ்நிலையில் கலாசார சீரழிவு நமக்குள்ளும் ஊடுருவி சிதைக்கின்றது. அந்த சிதைவில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள வேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வை குடிந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். கால மாற்றத்துக்கு ஏற்ப குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். கலாசாரத்தை இழந்தால் நம்மையே நாம் இழப்பதுபோன்று என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

கேரளாவில் அளவில்லா மழை, காவேரியில் வெள்ளம் என அனைத்து தண்ணீரும் வீணாக கடலில் சென்று கலக்கிறது. நாம் தண்ணீர் கேட்டு கேரளா, கர்நாடகத்துடன் போராடுகிறோம். இனியாவது அரசு இதுபோன்று தண்ணீர் கடலில் வீணாக சென்று கலப்பதை தடுத்து குளம், குட்டையில் நிரப்பி தேக்கி வைத்து பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயம் செழிக்கும்.

தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை முழுமையாக மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் விரைந்து நடத்தப்பட்டால் மத்திய அரசின் நிதி கிடைக்கும். அந்த நிதியை கொண்டு கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.

இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்