கோவையில் அடுத்தடுத்து சம்பவம்: பா.ஜனதா பிரமுகர்களின் கடைகளுக்கு தீ வைப்பு

கோவையில் அடுத்தடுத்து பா.ஜனதா பிரமுகர்களின் கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-13 00:00 GMT

கோவை,

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (வயது 33). பா.ஜனதா மண்டல பொதுச்செயலாளர். துணிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலையில் அவருடைய கடையில் இருந்து புகை வெளியேறியது.

இது குறித்து தகவல் அறிந்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் கடையில் பிடித்த தீ அணைந்து விட்டது. கடையில் இருந்த துணிகள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் 2 பேர் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதில் ஒருவர் ஹெல்மெட்டும், மற்றொருவர் கம்பளி குல்லாவும் அணிந்திருந்தனர். கடைக்கு தீ வைத்த பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து அவர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மோகன். பா.ஜனதா வார்டு பொறுப்பாளர். இவர் வெல்டிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு மர்ம நபர்கள் 2 பேர் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் புவனேஷ்வரன் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் தான் மோகன் கடைக்கும் தீ வைத்தது தெரியவந்தது. எனவே அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்