திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

திருவாரூர் தியாக ராஜர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2018-08-12 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கேடய உற்சவம், பூத வாகனம், வெள்ளி வாகனம், யானை, ரிஷப வாகனம், கைலாச வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று அம்மன் தேரோட்ட விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். மாலை 6.45 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் ஆரூரா, கமலாம்பாள் என கோஷங்கள் எழுப்பினர்.

இந்த தேர் கீழவீதியில் இருந்து புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக சென்று நிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து தேரில் இருந்து அம்மன் புறப்பட்டு கோவிலை அடைந்தார். 

மேலும் செய்திகள்