குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்

விபத்துகளை தடுக்க குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2018-08-12 21:45 GMT
கடலூர், 


கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த 3-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி அந்த வாகன உரிமையாளர்கள், திருட்டு மணலை வாங்குவோர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி கடந்த 3-ந்தேதி முதல் நேற்று வரை மணல் கடத்தலுக்கு பயன்படுத் திய 4 டிப்பர் லாரிகள், 10 டிராக்டர்கள், 2 மினி லாரிகள், 56 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 82 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சின்னகங்கணாங்குப்பத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 40) என்பவர் குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்து, எதிரே புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதி உயிரிழந்து விட்டார். அவர் குடிபோதையில், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டியதால் தான் உயிரிழந்துள்ளார். இதனால் அரசு பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவருக்கு வாகன விபத்து காப்பீட்டு தொகை கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆகவே விபத்துகளை தடுக்க டிரைவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்