சைக்கிள் பேரணியில் சீருடையில் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

அ.தி.மு.க.அரசின் சாதனைகளை விளக்கி ஆரணியில் வருகிற 17-ந் தேதி தொடங்கும் சைக்கிள் பேரணியில் திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 தொகுதிகளில் சீருடை அணிந்து இளைஞர்கள் பங்கேற்கிறார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2018-08-14 00:09 GMT
ஆரணி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் 3-வது கட்ட சைக்கிள் பேரணி திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டஅ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் பொதுக்கூட்டம் ஆரணி- சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள திடலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., (வடக்கு), பெருமாள் நகர் கே.ராஜன் (தெற்கு), கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.அருள்பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளரான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்கட்சியினர் கூறினர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறந்த ஆட்சி நடத்தி நம்மை வழி நடத்தி செல்கின்றனர்.

இந்த நிலையில் 17-ந் தேதி சைக்கிள் பேரணி நடக்கிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1,250 இளைஞர்கள் சீருடை அணிந்து பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு தொகுதி நிறைவு பகுதியிலும் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அப்போது அரசின் சார்பில் நாட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்ற திட்டங்கள் குறித்து விளக்கப்படும். சைக்கிளில் வரும் இளைஞர்களை இனி ‘சைக்கிள் கிங்’ என்று அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு தினமும் ஒரு பரிசு காத்திருக்கிறது.

வினைவிதைத்தவர்கள் வினையை தான் அறுப்பார்கள். மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மணிமண்டபம் அமைப்பதற்கு நீதிமன்றம் சென்று தடைவிதிக்க முயற்சித்தார்கள். இன்று கருணாநிதிக்கு சமாதி அமைக்க முதல்-அமைச்சரையும் துணை முதல்-அமைச்சரையும் சந்தித்து கேட்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என முதல்-அமைச்சர் கூறியதையடுத்து உடனடியாக அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றார்கள். இதனால் அவர்கள் செய்த சதி அனைவருக்கும் தெரியும்.

நமது சைக்கிள் பேரணி 21-ந் தேதி இரவு இதே இடத்தில் நிறைவு பெறும். 4 நாட்களும் வரும் அனைவருக்கும் ஒரு பேக்கில் சீருடை, பேஸ்ட், பிரஷ், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். அவர்கள் ஓட்டி வரும் சைக்கிளும் அவர்களுக்கே வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், நடிகர் போளூர் ஜெயகோவிந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எல்.ஜெயசுதா, நளினி மனோகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், கோவிந்தராசன், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் எம்.வேலு, நகர அவைத்தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் அமுதா அருணாசலம், டி.கருணாகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆரணி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பி.பாபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்