குண்டர் சட்டத்தில் ரவுடி உள்பட 3 பேர் கைது

சேலத்தில் குண்டர் சட்டத்தில் ரவுடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-14 22:45 GMT
சேலம்,

சேலம் அம்மாபேட்டை நாமமலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் கடந்த மாதம் 31-ந் தேதி காமராஜர் காலனி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த ரவுடி பிரகாஷ் (வயது 30), பாலசுப்பிரமணியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்குகள் உள்ளன. பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் கமிஷனர் சுப்புலட்சுமி ஆகியோர் போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள பிரகாஷிடம் போலீசார் வழங்கினர்.

சேலம் மாவட்டம் மல்லூர் வாழக்குட்டப்பட்டியை சேர்ந்தவர் சேகர் என்கிற அஸ்கா சேகர் (வயது 54). இவர் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்ததாக, இரும்பாலை மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜிஜார்ஜ், கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தார்.

இதை ஏற்று சேகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள அஸ்கா சேகரிடம் போலீசார் வழங்கினர்.

தலைவாசல் அருகே உள்ள கருமந்துறையை சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி கருமந்துறையில் இருந்து கார் மூலம் சேலத்திற்கு சாராயம் கடத்தி சென்றார். அப்போது ஆத்தூர் மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள மாரிமுத்துவிடம் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்