குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை: வயல்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நெற்பயிர்கள் நாசம்

குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. வயல்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன.

Update: 2018-08-18 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் சேதம் அடைந்துள்ளன. அதாவது வீடுகள், மின்கம்பங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் சேதமாகியுள்ளது. மீனவர்களின் படகுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பழையாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் குமரி, சோழன்தட்டை ஆகிய தடுப்பணைகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

ஏராளமான பகுதிகளில் வயல்களிலும் வெள்ளம் புகுந்ததால் பயிர்கள் பாழாகியுள்ளன. சுசீந்திரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்யும் அளவுக்கு நன்கு வளர்ந்து இருந்தது. ஆனால் தற்போது பெய்த கனமழை காரணமாக வயல்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நெல் பயிர்கள் நாசமாகிவிட்டன. பயிர்களின் நிலையை கண்டு விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள். இதே போல வாழைகளும் சாய்ந்துள்ளன. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை காரணமாக ரப்பர் தொழிலும் மந்தமடைந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வீடுகளை சூழ்ந்திருந்த மழை நீர் வடிய தொடங்கியதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மீண்டும் மழை பெய்தது. இரவு 12 மணி அளவில் தொடங்கிய மழை விடிய– விடிய பெய்து கொண்டே இருந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

நாகர்கோவில்– 10.2, பூதப்பாண்டி– 5.2, களியல்– 14.6, கன்னிமார் 21.2, குழித்துறை– 15, சுருளோடு– 15.2, தக்கலை– 17, குளச்சல்– 18.6, இரணியல்– 14, பாலமோர்– 31.2, கோழிப்போர்விளை– 25, அடையாமடை– 12, குருந்தன்கோடு– 14.2, முள்ளங்கினாவிளை– 28, புத்தன்அணை– 8.8,  என்ற அளவில் மழை பெய்திருந்தது.

இதுபோல் அணை பகுதிகளில் பேச்சிப்பாறை– 11.4, பெருஞ்சாணி– 7.2, சிற்றார் 1– 11.2, சிற்றார் 2– 6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மழை காரணமாக அணைகள் நிரம்பியுள்ளன. எனினும் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகளவிலேயே வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 7,640 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணைக்கு 3,449 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணைக்கு 496 கனஅடி வீதமும் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அதே சமயத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 7,875 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணையில் இருந்து 3,952 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணையில் இருந்து 536 கனஅடி வீதமும் என மொத்தம் 12 ஆயிரத்து 363 கனஅடி வீதம் தண்ணீர் உபரி நீராக திறந்துவிடப்பட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன. புத்தேரி குளம், சுசீந்திரம் குளம் உள்ளிட்ட பெரிய குளங்களில் தண்ணீர் முழுகொள்ளளவில் இருக்கிறது.

மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் 14 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

மேலும் செய்திகள்