அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

விருத்தாசலம் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-21 22:15 GMT
விருத்தாசலம், 


விருத்தாசலம் அடுத்த முகாசப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 65). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவர் தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மனைவி சரோஜாவுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, லட்சுமணன் படுத்திருந்த அறை கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டனர். பின்னர் அந்த மர்மநபர்கள் வீட்டின் இரும்பு பெட்டியில் இருந்த 9¾ பவுன் நகை மற்றும் 16 ஆயிரத்து 500 ரூபாய், வெள்ளி கொலுசு, பட்டுப்புடவை ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதேபோல் அதேபகுதியை சேர்ந்த மருதமுத்து(30) என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 2 கிராம் நகையையும், ரவிக்குமார் மனைவி லட்சுமி(30) என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 கிராம் நகை மற்றும் 3 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல் சிவகுமார் மனைவி ராணி(35) என்பவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும் மர்மநபர்கள் அதேஊரில் உள்ள நயினார் தெருவைச் சேர்ந்த சக்திவேல்(32) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவையும் உடைத்துள்ளனர். ஆனால் பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் திரும்பிச்சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடுகளை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீடுகளில் பதிவான ரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்த புகார்களின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோல கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்தாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(45). இவர் நெய்வேலியில் குடும்பத்துடன் தங்கி என்.எல்.சி.யில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் இவர் தனது குடும்பத்தினருடன் ஊத்தாங்கலில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை ஊத்தாங்கால் வீட்டுக்கு வந்த முருகன் மாலையில் வீட்டை பூட்டி விட்டு நெய்வேலிக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2½ பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள், எல்.இ.டி. டிவி, பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருவதோடு, கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் பீதிஅடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்