சோதனை ஓட்டத்தின் போது 58-ம் கால்வாயில் உடைப்பு

ஆண்டிப்பட்டி அருகே, வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு சோதனை ஓட்டம் நடத்திய போது 58-ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-23 21:45 GMT
ஆண்டிப்பட்டி, 


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58 கிராமங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில் ரூ.86 கோடியே 53 லட்சம் மதிப்பில் 58-ம் கால்வாய் அமைக்கப்பட்டது. 19 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் நிறைவடைந்தது.

இந்த பிரதான கால்வாயின் மொத்த நீளம் 27.64 கிலோ மீட்டர் ஆகும். 2 கிளை கால்வாய்களின் மொத்த நீளம் 22.17 கிலோ மீட்டர். இந்த கால்வாய் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட 35 கண்மாய்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதன் மூலம் 2 ஆயிரத்து 285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

58-ம் கால்வாயில் சோதனை அடிப்படையில், வைகை அணையில் இருந்து தண்ணீரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அருகே டி.புதூர் என்னுமிடத்தில் 58-ம் கால்வாயில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அந்த பகுதியில் உள்ள கால்வாயின் இரு கரைகளிலும் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் அருகே உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது.

இந்தநிலையில் உத்தப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், கால்வாயில் தண்ணீர் வருவதை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் காலை வரை கால்வாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு தான், டி.புதூரில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதற்கிடையே கால்வாயில் ஏற்பட்ட உடைப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கால்வாய் கரையின் இருபுறத்திலும் குழாய் பதித்து சிலர் தண்ணீரை திருட முயற்சித்திருப்பதால் உடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, கால்வாய் பெயரளவில் தான் வெட்டப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் திறக்கப்பட்டு சிறிது தூரம் கடந்து செல்லும் போது உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாய் கரைகளை முழுமையாக பலப்படுத்திய பின்பு தண்ணீர் திறக்கவேண்டும். மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியை தரமான முறையில் சீரமைக்க வேண்டும். அப்போது தான், உசிலம்பட்டி பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும் என்றனர்.

சோதனை ஓட்டத்தின் போது 58-ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட சம்பவம் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்