அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் - ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி காரைக்காலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-08-26 00:14 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மாத சம்பளத்தை தாமதிக்காமல் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பணி மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். சங்க உதவி தலைவர் குமரன் முன்னிலை வகித்தார். அசனா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

அரசு ஊழியர்கள் சங்க கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், துணை தலைவர் ஜோதிபாசு, த.மு.மு.க. மாநில செயலாளர் அப்துல் ரகீம், ம.ம.க. மாவட்ட செயலாளர் ஷாஜஹான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை விளக்கும் விதமாக ஊர்வலம் நடைபெற்றது. காரைக்கால் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பழைய ரெயில் நிலையம் அருகே நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்