தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2018-08-26 22:00 GMT
கூடலூர், 


தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 142 அடி வரை நீர் தேக்க கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக கடந்த 15-ந் தேதி அணை 142 அடியை எட்டியது. அப்போது அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், உயிர் பலி மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் கூறி முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த ஜாய்ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அணையின் நீர்மட்டத்தை வருகிற 31-ந் தேதி வரை 139.99 அடியிலேயே நிலைநிறுத்த உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு 5 மாவட்ட விவசாயிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்க துணை செயலாளர் செங்குட்டுவன் மற்றும் விவசாயியும், வக்கீலுமான செல்வக்குமார் ஆகியோர் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் 3 முறை 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. ஆனால் கேரளாவில் பெய்த கனமழையை கருத்தில் எடுக்காமல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 20 ஆயிரம் கனஅடி நீரால் தான் பேரழிவு ஏற்பட்டது என கேரள அரசின் வாதத்தை வைத்து இந்த தீர்்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட அநீதியாகும். அணை பலமாக உள்ளது என அறிவு சார்ந்த அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அரசியல்வாதிகள் வீண் புரளி கிளப்புவதால் இரு மாநில உறவுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு நீதிமன்றத்தை நாடி இந்த உத்தரவை பெற்றுள்ளதால் தமிழக அரசும் நமது உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளே சட்டப் போராட்டத்தில் குதிக்கும் நிலை உருவாகும். தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சரியான வாதங்கனை எடுத்து வைக்க வேண்டும். இதன் மூலம் தான் மீண்டும் அணையின் நீர்்மட்டத்தை உயர்த்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்