வேலூரில் ‘ஹெல்மெட்’ அணிவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூரில் இருசக்கர வாகனத்தில் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-08-27 00:15 GMT
வேலூர்,

இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்பவர் மட்டுமின்றி அந்த வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து போலீசார் ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி வேலூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வது குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக வேலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது.

ஊர்வலத்தை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று பின்னர் கிரீன் சர்க்கிள், காட்பாடி சாலை, மக்கான் சிக்னல், அண்ணா சாலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழியாக வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பாக முடிவடைந்தது.

இதில், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் (வடக்கு), லோகநாதன் (தெற்கு), புகழேந்தி (சத்துவாச்சாரி), நந்தகுமார் (பாகாயம்) மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, மணி மற்றும் ஏராளமான போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் இருசக்கர வாகனங்களில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ‘ஹெல்மெட்’ அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதன் பின்னால் அமர்ந்து வந்தவர்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி ‘ஹெல்மெட்’ அணிவதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

மேலும் செய்திகள்