கடத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

பொதுமக்கள் நேற்று கடத்தூர் - தாளநத்தம் சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை சிறைபிடித்தனர்.

Update: 2018-08-27 22:45 GMT
கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் 11-வது வார்டு வீரகவுண்டனூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். தண்ணீருக்காக அப்பகுதி மக்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது. சிலர் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். மேலும் இங்கு சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடத்தூர் - தாளநத்தம் சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சை சிறைபிடித்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன், வருவாய் ஆய்வாளர் விஜி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடம் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்