அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி பிரதமர் பதவியை கோரும் சரத்பவார் சொல்கிறார்

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி பிரதமர் பதவியை கோரும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார்.

Update: 2018-08-27 23:30 GMT
மும்பை,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பேசுகையில், “நாட்டின் பிரதமர் போட்டியில் தான் இல்லை என்றும், நாட்டின் பிரதமர் ஆகும் கனவு தனக்கு இல்லை” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ராகுல் சாந்தியின் பேச்சை சுட்டிக்காட்டி பேசியதாவது:-

பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ராகுல்காந்தி அறிவித்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் இவர்களை(பா.ஜனதா) அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவேண்டும். நாம் ஒன்றாக அரியணையில் அமரவேண்டும்.

அப்போது எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அவர்கள் பிரதமர் பதவியை கோரலாம். அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லாத பிராந்திய கட்சிகளுடன் இணைத்து தேர்தலை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

காங்கிரஸ் கட்சி குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பலமாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் உள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் நிலைமை மாறுபட்டு காணப்படுகிறது. எனவே பிராந்திய கட்சிகளுடன் இணைந்து அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்த உள்ளோம். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

மேலும் செய்திகள்