கடலூர் வழியாக விழுப்புரம்-மயிலாடுதுறை ரெயில்வே மார்க்கத்தை மின்மயமாக்கும் திட்ட பணிகள் மும்முரம்

விழுப்புரம்-மயிலாடு துறை ரெயில்வே மார்க்கத்தை மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென மின்கம்பங்கள் நடுவதற்கு பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2018-08-27 22:58 GMT
நெல்லிக்குப்பம், 


சென்னையில் இருந்து விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மார்க்கமாக திருச்சியை இணைக்கும் வகையில் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. அகல ரெயில் பாதையாக இருக்கும், இந்த மார்க்கத்தில் சோழன், செந்தூர் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில்கள் அனைத்தும் டீசல் என்ஜினை கொண்டே இயக்கப்படுகிறது. இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து கடலூர் வழியாக மயிலாடுதுறை வரையில் மின்சாரத்தால் ரெயிலை இயக்கிட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக மின்பாதை அமைக்கும் வகையில், தண்டவாளத்தில் இருபுறங்களிலும் இரும்பாலான மின் கம்பங்களை அமைப்பதற்காக பள்ளம் தோண்டு பணி நடந்து வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிகள் முடிந்த பின்னர் அடுத்ததாக மின்கம்பங்கள் நடப்பட உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கம் மின்பாதையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் பணிகள் நிறைவடையும். இந்த பணி முடிந்த பின்னர், இந்த பாதையில் கூடுதலாக ரெயில் இயக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார். சென்னையில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம் வழியாக தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ள ரெயில்வே பாதையில் மின்சாரத்தால் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் கடலூர் வழியாக மயிலாடுதுறை மார்க்கம், மின்மயமாக்கப்பட இருப்பது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 

மேலும் செய்திகள்