திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் முறையாக செயல்பட கோரிக்கை

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் முறையாக செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-31 22:30 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்திற்கு புகைப்படம் எடுக்கவும், பெயர், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு திருத்தங்களை சரி செய்வதற்காகவும், 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் மற்றும் இதுவரை ஆதார் எடுக்காதவர்கள் என பல தரப்பட்டவர்களும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

ஆனால் எப்போது அந்த டோக்கன் வழங்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் பொதுமக்கள் அதிகாலையிலேயே டோக்கன் பெறுவதற்கு வந்து காத்திருக்கின்றனர். அதிகபட்சமாக சுமார் 25 முதல் 30 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் என அனவைரும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து இங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் பொதுமக்களின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்வதில்லை.

டோக்கன் பெற்றவர்கள் பல நேரங்களில் இணைய தள வசதியில் குறைபாடு, மின்தடை போன்ற பல காரணங்களால் மாலை வரை காத்திருந்து ஆதார் புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பிசெல்கின்றனர். தனியார் இ–சேவை மையங்களில் இது போன்ற சேவைகளை பெறமுடிவதில்லை. இதனால் பொதுமக்கள் வேறுவழியின்றி இங்கு வரவேண்டியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு வங்கி கணக்கு அவசியம் தேவை என்பதால் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வங்கி கணக்கு தொடங்க முடிகிறது.

இதற்காக இம்மையத்திற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் பசியுடன் காத்திருக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. பல நேரங்களில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆதார் மையம் பூட்டப்பட்டு இருக்கும். இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்கும் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் திருவாடானை ஆதார் மையம் முறையாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு கூடுதல் பணியாளர்கள், கணினி வசதி, காத்திருப்பவர்களுக்கு இருக்கை, நிழற்குடை, குடிநீர், கழிப்பறை, போதிய கட்டிட வசதிகள் போன்றவற்றை செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்