தமிழில் பெயர் பலகை வைக்காத 41 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு, அதிகாரிகள் நடவடிக்கை

தமிழில் பெயர் பலவை வைக்காத 41 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2018-09-02 22:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில், சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளர்(பொறுப்பு) கதிரவன் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ராம்மோகன், சேதுபதி, நடராஜன் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தமிழில் பெயர் பலவை வைக்காத 41 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டு, அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிசெல்வி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டப்படி கடைகள், உணவு நிறுவனங்கள் பெயர்கள், பெயர் பலகையில் முதன்மையாக பெரிய அளவில் தமிழில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதன்கீழ் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் இடம் பெற வேண்டும். இதனை வணிக நிறுவனங்கள் கருத்தில் கொண்டு பெயர் பலகைகளை திருத்தம் செய்ய வேண்டும். பெயர் பலகைகள் அமைத்து தரும் நிறுவனங்களும், இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் தமிழில் பெயர் பலவை வைக்காத 41 நிறுவனங்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்நது இதுதொடர்பான ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். எனவே அனைத்து வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பெயர்களை, பெயர் பலகையில் தமிழில் வைக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்