அதிக மரங்கள் உள்ள நகரமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கலெக்டர் பேச்சு

புதுக்கோட்டையை அதிக மரங்கள் உள்ள நகரமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலெக்டர் கணேஷ் கூறினார்.

Update: 2018-09-02 22:45 GMT
புதுக்கோட்டை,

நீர் பறவைகள் அமைப்பின் சார்பில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு மாதிரி குறுங்காடு உருவாக்கும் வகையில் நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் கணேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி வனஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இதில் கலெக்டர் கணேஷ் பேசுகையில், புதுக்கோட்டை நகரில் இலுப்பை மரங்களை அதிக அளவில் நட வேண்டும். புதுக்கோட்டை நகரை சுற்றியுள்ள அடப்பன்வயல் உள்ளிட்ட குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

தஞ்சாவூர் மற்றும் திருச்சி நெடுஞ்சாலையின் ஓரத்தில் மரங்களை நட்டு பராமரிக்கலாம். புதுக்கோட்டையில் உள்ள சாலையில் மின்கம்பங்கள் இல்லாத பகுதியில் மரங்களை நட்டு பராமரிக்கலாம். நீர் பறவைகள் அமைப்பிற்கு தேவையான மரக்கன்றுகள் இலவசமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும்.

மரக்கன்றுகள் நடுவது என்பது மிகவும் எளிதான செயல். ஆனால் அவற்றை பராமரிப்பது என்பது மிகவும் கடினம். மரக்கன்றுகளை குறைந்தது 3 அல்லது 4 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகளை தடுப்பு கூண்டுகளை வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் புதுக்கோட்டை நகராட்சியின் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 5 ஆண்டுகளில் புதுக்கோட்டையை அதிக மரங்கள் உள்ள நகரமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாதிரி குறுங்காடு உருவாக்கும் வகையில் முதல் மரக்கன்றை கலெக்டர் கணேஷ் நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நீர்பறவைகள், விதைக்கலாம், பொறந்த ஊருக்கு புகழ் சேரு, தேசிய சீர்திருத்த அமைப்பு, மழைத்துளிகள், தமிழ்நாடு இளைஞர் கட்சி, பசுமை தேசம், மக்கள் பாதை உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்