காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு திருச்சியில் 1,000 பேர் பங்கேற்பு

திருச்சியில் காவலர் பணிக்கு நடந்த உடல் தகுதி தேர்வில் 1,000 பேர் பங்கேற்றனர்.

Update: 2018-09-03 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்(ஆண் மற்றும் பெண்), சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று நடந்தது. இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 1,000 பேர் கலந்து கொண்டனர். தேர்வுக்கு வந்தவர்களின் உயரம் மற்றும் மார்பளவு அளக்கப்பட்டது. அதன்பிறகு 1,500 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் இலக்கை 7 நிமிடம் அல்லது அதற்குள் ஓடி முடிக்க வேண்டும்.

நேற்று நடந்த உடல் தகுதி தேர்வினை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் ஆகியோர் பார்வையிட்டனர். இதேபோல் பெண்களுக்கு இன்று(செவ்வாக்கிழமை) உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இதில் 722 பேர் பங்கேற்க உள்ளனர்.

தொடர்ந்து நாளை(புதன்கிழமை) 784 பெண்களுக்கு உடற்கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதி தேர்வு நடத்த அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு அடுத்தகட்டமாக 8-ந் தேதி உடற்திறன் தேர்வும், ஆண்களுக்கு அடுத்தக்கட்டமாக 10-ந் தேதி உடற்திறன் தேர்வும் நடக்கிறது. இதையடுத்து 3-ம் கட்டமாக அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

மேலும் செய்திகள்