மாவட்ட செய்திகள்
கைக்குழந்தையுடன் தாய் உள்பட 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கைக்குழந்தையுடன் தாய் உள்பட 3 பெண்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்கும் வரும் பொதுமக்களில் சிலர் மண்எண்ணெயை பாட்டிலில் கொண்டு வந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதனை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் மனு கொடுக்கும் பொதுமக்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பைகளில் வைத்து கொண்டு செல்கிறார்களா? என்பதை சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்த மணியின் மனைவி வசந்தா (வயது 47) தனது கணவரின் சகோதரிகளான செல்வி(36), லெட்சுமி (35), லெட்சுமியின் 9 மாத கைக்குழந்தை இம்மானுவேல் ஆகியோருடன் வந்தார்.

அதில் வசந்தாவும், செல்வியும் பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைத்து குளிர்பான பாட்டில்களில் மண்எண்ணெயை கொண்டு வந்திருந்தனர். அவர்கள் போலீசார் கண்ணில் படாமல் கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கார் அருகே நின்று கொண்டு வசந்தா தனது உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றினார். இதனை தொடர்ந்து செல்வி தனது உடலிலும், தங்கை லெட்சுமி, தங்கையின் மகன் இம்மானுவேல் ஆகியோர் மீதும் மண்எண்ணெயை ஊற்றினார். அவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெயை ஊற்றி கொண்டிருந்த போது, அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று வசந்தா, செல்வி ஆகியோரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றினர்.

இதனை தொடர்ந்து வசந்தா உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றியிருந்ததால், அவரை உடனடியாக மீட்டு போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அந்த குடும்பத்தினர் தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து போலீசார் செல்வியிடம் விசாரித்தனர். அவர் கூறுகையில், எனது குடும்பத்தினரும், தனது தங்கை லெட்சுமி குடும்பத்தினரும், எங்கள் அண்ணன் மணி வீட்டின் அருகே தனித்தனியே வசித்து வருகிறோம்.

எங்களுக்கு சொந்தமான விளை நிலங்கள் மருவத்தூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட செங்கணத்தில் உள்ளது. அதில் நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். இந்நிலையில் எங்கள் நிலத்தின் அருகே உள்ள மற்றொரு நிலத்தின் உரிமையாளரும், எங்கள் உறவினரான ஒருவரிடம் எங்கள் நிலத்தின் பட்டாவை கொடுத்து வைத்திருந்தோம். மேலும் நாங்கள் அவரிடம் கடன் பெற்றிருந்தோம். அதனை திருப்பி செலுத்திவிட்டோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அந்த உறவினர் எங்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து வைத்து கொண்டு, மற்ற 2 பேருடன் சேர்ந்து எங்களை அந்த நிலத்தின் உள்ளே விடாமல் தடுத்து வருகிறார்.

நாங்கள் அந்த நிலத்தில் கொட்டகை அமைத்திருந்தோம், அதனையும் அவர் அகற்றி விட்டார். மேலும் நிலத்தின் பட்டாவை திரும்ப எங்களிடம் தரவில்லை. பட்டாவை கேட்டால் திருப்பி தராமல் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் நிலையம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் போலீசார், அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே தான் நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெயை உடலில் ஊற்றினோம் என்றார். மேலும் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள அந்த உறவினர் மீது நடவடிக்கை எடுத்து, அந்த நிலத்தையும், அதன் பட்டாவையும் எங்களுக்கு வாங்கி தர வேண்டும் என்றார்.

பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவிடம் இது சம்பந்தமாக ஒரு மனுவை அளித்தனர். இதையடுத்து செல்வி, லெட்சுமி, அவரது கைக்குழந்தை ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைக்குழந்தையுடன் தாய் உள்பட 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆலத்தூர் தாலுகா நக்க சேலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், நக்கசேலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நாரை கிணறு என்கிற குளத்தில் தனி நபர் களின் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள், விவசாய மின் இணைப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.